உ - வரிசை 7 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
உண்ணாவிரதம்

1.உண்ணாநோன்பு, வேண்டுதல் காரணமாக உண்ணாமல் இருத்தல் 2.(ஒன்றுக்கு எதிர்ப்பைத் தெரிவித்து )உண்ணாமல் இருந்து நடத்தும் போராட்டம்

உண்ணி

1. (ஆடு, மாடு, நாய் போன்ற விலங்குகளின் தோல்களில் ஒட்டிக்கொண்டு) இரத்தத்தை உறிஞ்சி வாழும் மிகச் சிறிய உயிரினம் 2.(விலங்குகளைக் குறிக்கும்போது தாவரத்தையோ மாமிசத்தையோ)உணவாகக் கொள்ளும் உயிரினம்

உண்ணிக்கொக்கு

கால்நடைகளைப் பின் தொடர்ந்து சென்று பூச்சிகள் மற்றும் உண்ணிகளை உண்ணும், மஞ்சள் நிற அலகும் வெள்ளை நிற உடலும் கொண்ட ஒரு வகைக் கொக்கு

உண்மை

பொய் அல்லாதது, சத்தியம்
போலி அல்லாதது
முறைபிறழாதது, நேர்மை

உண்மையில்

'சொல்லப்போனால்', 'பார்க்கப்போனால்' என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்

உணர்

(உடலிலும் மனத்திலும் ஏற்படும் நிலையைப் புலன்களால்) அனுபவித்து அறிதல்
புரிந்துகொள்ளுதல்
(ஒரு நிலையோ தன்மையோ மனத்திற்கு)தெரியவருதல்

உணர்ச்சிவசப்படு

அறிவை மீறிய மனநிலைக்கு ஆட்படுதல்

உணர்த்து

(ஒரு தகவலை) தெரிந்து கொள்ளச் செய்தல், புரிய வைத்தல்
குறிப்பிடுதல்

உணர்வு

(ஒன்றைக் குறித்த அழுத்தமான அல்லது வலுவான) மனநிலை
(ஒன்றைக் குறித்த) தீவிரமான உணர்ச்சி
உள்ளுணர்வு
சுயநினைவு
நமக்குத் தேவையான உணர்ச்சியை, அறிவுப் பூர்வமாக சிந்தனை செய்து, நமக்கு வேண்டும் என ஏற்கும் திறனை உணர்வு என்கிறோம்.

உணவு

(மனிதன் விலங்கு போன்றவை)உயிர் வாழ்வதற்காக உட்கொள்வது/(தாவரங்கள் )உயிர்வாழ்வதற்காக எடுத்துக்கொள்ளும் சத்துகள்
ஆதாரம்
உணவுப் பொருள்

உணவு

கடித்தல்
நக்கல்
பருகல்
மெல்லல்
விழுங்கல்

உணவுக் குழல்

உண்ட உணவு உள்ளே செல்வதற்காக வாயிலிருந்து இரப்பை வரை உள்ள குழாய் போன்ற உறுப்பு

உணவுச் சங்கிலி

இயற்கையில் ஒரு உயிரினம் மற்றொன்றுக்கு உணவு என்ற வகையில் தாவரங்கள் விலங்குகள் என்று எல்லா உயிரினங்களும் இணைந்த தொடர்

உணவு விடுதி

உரிய விலையைக் கொடுத்து உணவை உண்டு செல்லக்கூடிய வசதி கொண்ட விடுதி

உத்தமம்

நல்லது விளைவிக்கக் கூடியது
உயர்ந்தது, எடுத்துக்காட்டாகக் கூறக் கூடியது
உயர்ந்தது, எடுத்துக்காட்டாகக் கூறக்கூடியது
சுபம் ,மங்களம்

உத்தமன்

சிறந்த குணங்களை உடையவன்
(பெண்பால் - உத்தமி)

உத்தமி

(பொதுவாகச்) சிறந்த குணங்களை உடையவள், கற்பில் சிறந்தவள்

உத்தரக்கிரியை

இறந்தவருக்காக(பொதுவாகப் பதினாறாம் நாள்) செய்யும் சடங்கு, கருமாதி

உத்தரணி

(பூசையின் போது) நீர் எடுக்கப் பயன் படும் சிறு உலோகக் கரண்டி

உத்தரம்

வடக்கு
(வீடுகளில் கூரையைத் தாங்குவதற்காக) இரு பக்கச் சுவர்களை இணைத்துப் போடப்படும் நீண்ட மரக்கட்டை அல்லது இரும்புக் கிராதி
(பாலம் போன்றவற்றில் ) சுமையைத் தாங்குவதற்காக இரண்டு தூண்களை இணைக்கும், சீமெந்தினால் ஆன இணைப்பு