உ - வரிசை 17 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
உரஞ்சுபடு

தகராறு செய்தல்

உரத்த

(குரல் ஒலியைக் குறிக்கும்போது)சத்தம் மிகுந்த,பலத்த

உரத்த சிந்தனை

மனத்தில் தோன்றும் எண்ணம் கருத்து ஆகியவற்றை( மேலும் விரிவாக்கும் நோக்கத்துடன்)அப்படியே வெளிப்படுத்துதல்

உரம்

(பயிர்களின் வளர்ச்சிக்கு இடப்படும் )ஊட்டச்சத்து
(உடல்)வலிமை,பலம்

உரல்

வட்ட வடிவ மேற்பரப்பின் நடுவில் கிண்ணம் போன்று குழிவுடையதும் குறுகிய இடைப்பகுதியுடையதும் தானியங்களைக் குத்த அல்லது இடிக்கப் பயன்படுவதுமான (முழங்கால் உயரத்தில் இருக்கும்) கல்லால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட சாதனம்

உராய்

(ஒரு பரப்பில்) இழுபட்டுத் தேய்தல்
ஒன்றொடொன்று தே [உராய்தல், உராய்ஞ்சுதல், உராய்வு]

உராய்வு

1.ஒன்றன் மீது மற்றொன்று இழுபட்டுத் தேய்வது 2.(இரண்டு பொருள்களின் பரப்புகள் ஒன்றோடு ஒன்று தொட்டுக்கொண்டிருக்கும் நிலையில்)ஒன்றின் இயக்கத்திற்கு மற்றொரு பரப்பால் ஏற்படும் தடை

உரி

(பழம்,கிழங்கு போன்றவற்றின் தோலை அல்லது விலங்கின் தோல் மரத்தின் பட்டை முதலியவற்றை)நீக்குதல்,பிய்த்தல்

உரிச்சொல்

பெயருக்கும் வினைக்கும் (பெரும்பாலும்) அடையாக வரும் சொல்
தமிழ்மொழியிலுள்ள நால்வகைச் சொற்களில் ஒன்று

உரிசை

(உணவுப் பொருளின்)சுவை

உரித்தாக்கு

1.(ஒருவருக்குத் தன் நன்றி,வாழ்த்து முதலியவற்றை)சேரச்செய்தல் 2.சமர்ப்பித்தல்

உரித்தாகு

(நன்றி, வாழ்த்து முதலியன ஒருவருக்கு)சேர்தல்

உரித்தான

இயல்பான, பொருத்தமான

உரித்து

உரியது
உரிமை

உரித்துக்காட்டு

(ஒருவரிடம் அல்லது ஒன்றிடம் இதுவரை அறியப்படாமல் இருந்த உண்மையான தோற்றத்தை அல்லது குணத்தை) வெளிப்படுத்துதல்

உரித்துவை

(தோற்றத்தில், குணத்தில் நெருங்கிய உறவினரை)ஒத்திருத்தல், அச்சாக இருத்தல்

உரிமம்

ஓர் இடத்தைப் பயன்படுத்துதல், ஓர் தொழிலை மேற்கொள்ளுதல் போன்றவற்றுக்கு உரிய அதிகாரியிடமிருந்து பெறப்படும் அனுமதி

உரிமை

சட்டபூர்வமாக அல்லது நியாயத்தின் அடிப்படையில் ஒருவர் கோருவது/ அப்படிக் கோருவதைச் சட்டமோ மரபோ அனுமதிப்பது
(சட்டப்படி அல்லது நியாயப்படி அல்லாமல் ஒருவர் உறவாலோ அல்லது நட்பாலோ )தன்னளவில் எடுத்துக்கொள்ளும் சுதந்திரம்
(ஒருவருக்கு) உரியது,சொந்தமானது

உரிமைக்குழு

சட்டமன்றத்தின் அல்லது நாடாளுமன்றத்தின் உரிமைகளையும் உறுப்பினர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அந்த அவை உறுப்பினர்களுள் சிலரைக் கொண்ட குழு

உரிமைப்பங்கு

காப்புரிமை செய்யப்பட்ட ஒன்றைப் பயன்படுத்துபவர் அதன் உரிமையாலருக்குத் தரவேண்டிய தொகை/ அரசுக்கோ தனிப்பட்டவருக்கோ உரிமையாக உள்ள நிலத்திலிருந்து எடுக்கப்படும் (எண்ணெய் ,தாதுக்கள், நிலக்கரி முதலிய)பொருளுக்கு ஒரு நிறுவனம் தரவேண்டிய தொகை